90வயது தலைவன் 100 வயது தொண்டனுக்கு எழுதிய கடிதம்!

Published on

எனக்கு அகவை 90 என்பது உனக்குத் தெரியும்! இப்போதும் நான் அன்றாடம் அண்ணா அறிவாலயத்திற்கு வரத் தவறு வதில்லை. காலையில் ‘முரசொலி‘ நாளிதழுக்காக உடன்பிறப்பு மடல்களோ, கேள்வி பதில்களோ எழுதி முடிக்கவே 10.30 மணியாகி விடுகிறது.  அதன்பிறகுதான் காலை உணவே! அதற்குப் பிறகுதான் அறிவாலயம். பார்வையாளர் களைச்சந்தித்து முடிக்கவே பகல் 1 மணி ஆகிவிடும். கடந்த சில நாட்களுக்கு முன்பு நான் புறப்படத் தயாரான போது, ஒரு முதியவர் என்னை நெருங்கினார்.

‘யார்? என்ன வேண்டும்?‘ என்றேன். ‘நான் கட்சிக் காரன் அய்யா, எனக்கு ஒன்றும் வேண்டாம்; உங்களைப் பார்க்க வேண்டும்; அவ்வளவுதான்‘‘ என்றார். கார் அருகே அழைத்தேன். ‘தலைவரே! எனக்கு 100வது வயது பிறக்கப்போகிறது; எனக்கு நினைவு தெரிஞ்சது முதல் நான் தி.மு.க; காஞ்சிபுரம் மாவட்டம். உங்களிடம் வாழ்த்துப் பெறுவது ஒன்றுதான் என்னுடைய விருப்பம்‘‘ என்றார். அவரை நான் வாழ்த்திவிட்டுப் புறப்பட்டேன். அந்தப் பெரியவருக்கு மிகப் பெரிய மன நிறைவு. அவர் பெயர் சாமிக்கண்ணு.

இவரது 100வது பிறந்த நாள் 27-9-2013 என்பதை அறிந்த நான் தம்பி ஸ்டாலினிடம் மாவட்டக் கழகச் செயலாளரை அவருடைய இல்லத்திற்கே சென்று வாழ்த்தும்படி கூறிய தோடு, அவர் கொடுத்த, அந்த மனுவினை தம்பி ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு நான் புறப்பட்டேன்.

சாமிக்கண்ணுவையும், அவருடைய துணைவியாரையும் தம்பி ஸ்டாலின் அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று பொன்னாடை அணிவித்து, ஆயிரம் ரூபாய் நிதியினையும் அளித்து அனுப்பிவைத்திருக்கிறார். மேலும் நான் கூறியதன்படி ஸ்டாலின் காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர்  தா.மோ அன்பரசனைத் தொடர்பு கொண்டு, சாமிக்கண்ணுவின் பிறந்தநாள் அன்று அவருடைய இல்லத்திற்கே சென்று அவரை கழகத்தின் சார்பில் கௌரவப்படுத்த வேண்டுமென்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அண்ணா அறிவாலயத்தில் அந்த நூறு வயதான சாமிக்கண்ணு காஞ்சிபுரம் மாவட்டம் என்று சொன்னதன் விளைவாகவோ என்னவோ, காரில் இல்லத்திற்குப் புறப்பட்ட என் நினைவலைகளில் உடனே அண்ணா வந்தார், அவரைத் தொடர்ந்து சி.வி.எம். வந்தார், சி.வி. ராஜகோபால் வந்தார், கே.டி.எஸ். மணி வந்தார், காஞ்சி கல்யாணசுந்தரம் வந்தார், கம்பராசபுரம் ராஜகோபால் வந்தார், வெங்கா வந்தார், மதுராந்தகம் ஆறுமுகம் வந்தார், பூவிருந்தவல்லி ராஜரத்தினம் வந்தார், தி.மு.க. வரலாறு எழுதிய டி.எம். பார்த்த சாரதி வந்தார், குன்றத்தூர் தா.மோகலிங்கம் வந்தார், அதே குன்றத்தூரைச் சேர்ந்த தி.ந.சம்பந்தம், மணிமொழியார் என்று ஒவ்வொருவரும் என் மனக்கண் முன் தோன்றி நலம் விசாரித்தனர்.

நினைவில் வந்த அண்ணாவிடம், ‘வயதாகி விட்டது அண்ணா‘ என்றேன். ‘என்ன வயதாகி விட்டது, 1969இல் உங்களை விட்டு வரும்போது, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பணி குறைந்தது இன்னும் ஐம்பதாண்டு காலத்திற் குத் தேவைப்படுகிறது என்று சொன்னேனே, அந்த ஞாபகம் வரவில்லையா? அந்த ஐம்பதாண்டு என்பது 2019ஆம் ஆண்டுதானே வருகிறது; அதற்குப் பிறகும் நம்முடைய கழகத்தின் பணி தமிழ்நாட்டிற்குத் தேவைதான்!'' என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டக் கழகச் செயலாளர் அன்பரசனும் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டக் கழக முன்னணியினரும் 27ஆம் தேதியன்று சாமிக் கண்ணுவின் இல்லத்திற்கே சென்று அந்தத் தம்பதியினருக்கு மாலை மரியாதை செய்து, என் சார்பில் பிறந்த நாள் வாழ்த்துகளையும் தெரிவித்து, மாவட்டக் கழகத்தின் சார்பில் பொற்கிழியும் வழங்கி, அதைப் புகைப்படம் எடுத்து எனக்கு அனுப்பியிருக்கிறார்கள்.

நமது கழகத்தில் இந்த ஒரு சாமிக்கண்ணு மாத்திரமல்ல; எந்தப் பதவியிலும் அவர் இருந்ததில்லை. கட்சியினால் தனக்கு என்ன இலாபம் என்று நினைத்துப் பார்த்தது கூட  இல்லை. இன்னும் எத்தனையோ சாமிக்கண்ணுகள் இணைந்து வளர்த்த கட்சிதான் திராவிட முன்னேற்றக் கழகம்.  அந்த இயக்கத்தின் வளர்ச்சியே நம்முடைய வாழ்க்கை.

( 2013 -ல் கருணாநிதி உடன்பிறப்புக்கு எழுதிய கடிதத்தில் இருந்து)

ஆகஸ்ட், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com